ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில், ஆளும் பாஜகவை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
மேலும், குஜராத் தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் பல நலத்திட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இரண்டு நாள்கள் பயணமாக குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு சென்றுள்ளார். சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான இன்று (செப். 3) செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"பாஜகவில் இருந்து நிதி வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், ஆம் ஆத்மிக்காக உள்ளிருந்து வேலை பாருங்கள். நான் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளின் பலன்கள் உங்களுக்கும் கிடைக்கும். எங்களுக்கு பாஜக தலைவர்கள் தேவையில்லை.
பூத் அளவிலும், கிராமம், தாலுகா அளவிலும் இணைந்து பணியாற்றும் பாஜக தொண்டர்கள்தான் தேவை. இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் பாஜகவுக்கு வேலை பார்த்ததற்கு, கட்சி உங்களுக்கு என்ன செய்தது. பாஜக உங்களுக்கு தரமான இலவச கல்வியையோ, மருத்துவத்தையோ அல்லது இலவச மின்சாரத்தையோ உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கோ அல்லது குஜராத் மக்களுக்கோ தராது. ஆனால், ஆம் ஆத்மி உங்களது நல்வாழ்வுக்கு அனைத்தையும் வழங்கும்.
சூரத் மக்கள் ஆளும் வர்க்கம் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதற்காக, அங்கு சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு ஒன்றை நாங்கள் நடத்தினோம். இதில், சூரத் நகரில் உள்ள 12 தொகுதிகளில், ஏழு இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. இனி வரும் காலத்தில் மீதம் உள்ள இடங்களையும் அங்கு கைப்பற்ற முனைப்புக்காட்டுவோம்.
பாஜக பணியாளர்களாகிய நீங்கள் அங்கேயே இருந்து, அவர்கள் உங்கள் பணிக்கு கொடுக்கும் நிதியினை வாங்கிக்கொள்ளுங்கள். எங்களிடம் பணம் இல்லை, ஆனால் எங்கள் கட்சிக்கு வேலை பாருங்கள். நாங்கள் ஆட்சியமைத்தால் இலவச மின்சாரத்தை அளிப்போம். அது உங்கள் வீட்டிற்கும் வரும்.
24 மணிநேரமும் இலவசமாக மின்சாரத்தைக் கொடுப்போம். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகளைக்கட்டி அதில் இலவச கல்வியை வழங்குவோம். மேலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தரமான இலவச கல்வியை வழங்குவோம். உங்கள் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்குவோம்" என்றார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில பொதுச்செயலாளர் மனோஜ் சரோதியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாஜகவின் கையாளாகாத நிலையைக் காட்டுகிறது. தோல்வியை நெருங்கும்போது என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகர் வழக்கு விசாரணைக்கு ஆஜரான நோரா ஃபதேஹி