ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த சீமா பத்ரா என்பவர், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர். இவரது வீட்டில் பழங்குடியினத்தைச்சேர்ந்த சுனிதா(29) என்ற பெண்மணி கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்தப் பெண்ணை சீமா பத்ரா கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சூடு வைப்பது, இரும்புக் கம்பியால் அடிப்பதும் உள்ளிட்ட சித்ரவதைகளை செய்து வந்துள்ளார். இதில் உச்சகட்டமாக கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
குடிநீர், உணவு எதுவும் தராமல் தனியறையில் அடைத்து வைத்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பான தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து பாஜக பிரமுகர் சீமாவின் வீட்டுக்குச்சென்ற போலீசார், சுனிதாவை மீட்டனர். முகம் உள்பட உடலில் பல இடங்களில் காயங்களுடன் மீட்கப்பட்ட சுனிதாவை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து சீமா பத்ராவை இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. சீமா மீது எஸ்சி-எஸ்டி வன்பொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
சுனிதாவை கொடூரமாக தாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தனது மகனை சீமா பத்ரா மனநல மருத்துவமனையில் சேர்த்ததாகத் தெரிகிறது.