டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 19 ஆண்டுகளில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த 19 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 956 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது 19 ஆசிட் வீச்சு வழக்குகளும் பதிவாகியுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹல்த்வானியைச் சேர்ந்த ஹேமந்த் கோனியா விண்ணப்பித்ததன் மூலம், கடந்த 2000-2019 காலகட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிய நபர்களுக்கான நிதியுதவியாக, மாநில அரசால் இதுவரை 4 கோடியே 81 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஹேமந்த் கோனியா, "உத்தரகாண்ட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க மாநில அரசால் முறையான சட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. இதன் விளைவாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாதிக்கப்பட்டோருக்கான நீதியை பெற்று தர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதியின் உதவியாளர் ஒருவர் கைது