கடந்த 2018ஆம் ஆண்டு, 53 வயது கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறை கைது செய்துள்ளது.
இந்த கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் பலர் மகாராஷ்டிர அரசாங்கத்தை விமர்சித்தும், குற்றம்சாட்டியும் வருகின்றனர். அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட நாள் நாட்டின் கருப்பு நாள் என்றும், பத்திரிகை சுதந்திரத்தை சீரழிக்கும் விதமாக மகாராஷ்டிர அரசு செயல்படுவதாகவும் பலர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர ஆளும் கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது போன்ற மனநிலையில் பேசிவருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. அர்னாப் கோஸ்வாமி இந்திய தண்டனைச் சட்டம் 306 தற்காலைக்குத் தூண்டுதல், 34 பொதுவான நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு இறந்த நாயக்கின் குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரின் மனைவி அளித்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு எங்கே ஜனநாயகத்தின் நான்காவது தூண் தாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பவர்கள் ஜனநாயகத்தின் முதல் தூணை நசுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சட்டத்தின் முன் பிரதமர் உள்பட அனைவரும் சமம் என விளக்கமளித்துள்ளது.