2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங், மும்பையில் டிஆர்பி எனப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை தவறாக அதிகரித்துக் காட்டி உள்ளதாக ரிபப்ளிக் டிவி, பாக்ஸ் சினிமா, ஃபக்த் மராத்தி ஆகிய சில தொலைக்காட்சி சேனல்கள் மீது குற்றம் சாட்டினார்.
டிஆர்பியை அதிகரித்துக் காண்பித்த வழக்கு
இந்நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் பார்வையாளர்களை அதிகரித்துக் காண்பிக்க அத்தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (Broadcast Audience Research Council (BARC)) தலைமை செயல் அலுவலர் பார்த்தோ தாஸ்குப்தாவின் உதவியை நாடியதாகவும், சட்டவிரோதமாக டிஆர்பியை அதிகரித்துக் காண்பிக்க பணம் கொடுத்ததாகவும் மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.
மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல்
மும்பை காவல்துறையின் குற்ற புலனாய்வுப் பிரிவு (சிஐயு) நேற்று (ஜூன்.22) இது குறித்த மூன்றாவது குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஊழியர்கள் உள்பட ஆறு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பார்க் குறித்த ரகசியத் தகவல்களை அர்னாப் கோஸ்வாமியும், பார்த்தா தாஸ்குப்தாவும் பலமுறை பரிமாறிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சான்றுகள்
மேலும், அர்னாப் கோஸ்வாமி, பார்த்தா தாஸ்குப்தா இருவருக்கும் இடையிலான வாட்ஸ் அப் உரையாடலை முக்கிய சான்றாகவும் மும்பை காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்தின் பார்வையாளர் கணக்கை குறைத்துக் காண்பித்த காரணத்தால் அந்நிறுவனத்துக்கு 431 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், தாஸ்குப்தாவின் வீட்டில் கைப்பற்ற பணம், நகைகள் உள்ளிட்டவை இதற்காக அர்னாப் கோஸ்வாமி கொடுத்த பொருள்களாகவும் இருக்கலாம் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஸ்குப்தா முந்தைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!