டெல்லி: அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (செப். 13) வெளியிட்டார். இதுகுறித்து மன்சுக் மாண்டவியா கூறுகையில், "அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கியபங்காற்றி வருகிறது.
அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மத்திய அரசு மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இந்த பட்டியலை தயாரித்துவருகிறது. இந்தப் பட்டியலில் கூடுதலாக 34 மருந்துகளுடன் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப் பிரிவுகளுக்கென இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியல் 1996ஆம் ஆண்டு முதல் முதலாக வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் 3 முறை திருத்தப்பட்டது. குறிப்பாக இந்தாண்டு புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாரதி பிரவிண் பவார், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புதிய மேம்படுத்தப்பட்ட பிரைவசி அம்சங்களுடன் ஆப்பிள் iOS 16 அறிமுகம்