மீரட்: இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இதில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 60 மீ ஈட்டி எறிந்து இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலம் வென்றார்.
இவர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர். இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய அவரிடம் ஈடிவி பாரத் ஊடகம் பிரத்யேகமாக பேட்டி எடுத்தது. அப்போது அன்னு தனது பல்வேறு அனுபவங்கங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து அன்னு கூறுகையில், "எனது குடும்பத்தில் பெண்கள் விளையாட அனுமதி கிடையாது. ஆனால் எனக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒரு முறை பள்ளியில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தை பிடித்தேன். அப்போது எனக்கு ஈட்டி எறிதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆதலால் எனது வீட்டிற்கு தெரியமால் பள்ளியில் பயிற்சி செய்வேன்.
இதனைக்கண்ட பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் என்னை மேலும் ஊக்கப்படுத்தினார். ஈட்டி எறிதல் பயிற்சியாளர் தர்மபால் என்பவரிடம் பயிற்சி பெற எனக்கு உதவினார். அதோடு எனது தந்தையிடமும் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வாங்கினார்.
ஆரம்பத்தில் என்னால் ஈட்டி வாங்க முடியவில்லை. ஆகவே, மூங்கில் குச்சிகளை ஈட்டி போல செதுக்கி பயற்சி செய்தேன். எங்களது விவசாய நிலமே எனக்கு பயிற்சி களமாக இருந்தது. அப்படியே மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
வெண்கலம் வெல்ல முடிந்தது. ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் விளையாட்டு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்துவதிலும் இந்த சமூகம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சர்வதேச உஷூ போட்டியில் ம.பி. வீராங்கனை தங்கம்