சென்னை: நடிகர் விஜயின் வாரிசு திரைப்பட படப்பிடிப்பில் உரிய அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. யானைகளை சினிமாவில் பயன்படுத்த, விலங்குகள் நல வாரியத்தில் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், வாரிசு படத்தில் ஒரு யானைக்கு அனுமதி பெற்று, ஐந்து யானைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பொதுவாக சினிமாவில் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கு, விலங்குகள் நல வாரிய மருத்துவர், விலங்கின் செயல்பாட்டு தன்மை, உடல் ஆரோக்கியம், பயிற்சி பெற்ற விலங்கா? என பரிசோதனை செய்து, பின்னர் அனுமதி வழங்குவார். இந்த அனுமதியை பெறாமல் விலங்குகளை சினிமாவில் பயன்படுத்துவது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் படி குற்றமாகும்.