அமராவதி: திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி ஆந்திர சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ரூ.300 கோடி முறைகேடு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மற்றும் வீட்டு காவலில் வைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவையும் ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தரப்பில், 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகக் கூறி வலது கண்ணில் சிகிச்கை அளிக்க வேண்டி இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி சந்திரபாபு நாயுடுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியும், மருத்துவமனையில் கண் சம்பந்தமான சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தியும், வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் வரும் நவம்பர் 28 ஆம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று (நவ. 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதிட்டார். அதன்பின், குற்றப்புலனாய்வுத்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கினார். மேலும், நவம்பர் 30 ஆம் தேதி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார். அதுவரை இந்த வழக்கு குறித்து எந்த ஒரு தகவலையும் சந்திரபாபு நாயுடு பொது வெளியில் வெளியிடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "நாங்கள் மீண்டு வருவோம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!" - முகமது ஷமி உருக்கம்!