சண்டிகர்: சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற கோஷம் பல ஆண்டுகளாக ஒலித்து வருகின்றது. தங்களுக்கு தனி நாடு வழங்க வேண்டும் என காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முக்கியமானவர், வாரீஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவர், அம்ரித் பால் சிங்.
அம்ரித் பால் சிங்கின் கூட்டாளி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகித்த போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். மேலும் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த மார்ச் 18ஆம் தேதி அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது, அவர் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்ரித் பால் சிங்கை கைது செய்து போலீசார் நாடகமாடுவதாக அவரது தந்தை பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக அமெரிக்கா வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, பிரட்டனின் லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இந்தியத் தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தலைமறைவானதாக கூறப்படும் அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.
இறுதியாக உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் பகுதியில் அம்ரித் பால் சிங் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்தியா - நேபாளம் எல்லையில் அந்த நகரம் உள்ளதால் எல்லை தாண்டி இருக்கக்கூடும் என போலீசார் வாகனத் தணிக்கை உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஜாக்கெட், டிராக் சூட், கண்ணாடி அணிந்தவாறு அம்ரித் பால் சிங் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவின. அம்ரித் பால் சிங்கை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ள போலீசார் 5 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
அம்ரித் பால் சிங் தலைமறைவாக இருக்க உதவியதாக பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்நிலையில், அம்ரித் பால் சிங், தனது தனிப்பட்ட பாதுகாப்பு படைக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டு உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனந்த்பூர் கல்சா பவுஜ் மற்றும் அம்ரித் பால் டைகர் போர்ஸ் ஆகிய படைகளுக்கு ஆயதப்பயிற்சி அளிக்க அம்ரித் பால் சிங் உத்தரவிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜருடன் பழக்கம் இருப்பது தெரிய வந்து உள்ளதாகக் கூறினார்.
அம்ரித் பால் சிங் தேடுதல் பணித்தொடங்கி 9 நாட்கள் கடந்த நிலையில் இந்தியா - நேபாளம் எல்லையில் வான்டட் போஸ்டர் ஒட்டி போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: "தகுதி நீக்கப்பட்ட எம்.பி" - ராகுல் காந்தியின் ட்விட்டர் பயோ மாற்றம்!