கவுகாத்தி: தேர்தல் பரப்புரை, மத நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலத்துக்கு இன்று (பிப். 25) செல்ல உள்ளார்.
இதுதொடர்பாக அசாம் மாநில் பாஜக தலைவர், அமைச்சர் ஹமிந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டரில், "அசாம் மாநில மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திட்டத்தில் பங்கேற்க அமித்ஷா இன்று (பிப். 25) வர இருப்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியும், துறவியுமான மகாபுருஷ ஸ்ரீமந்த சங்கரதேவ பிறந்த இடமான நாகான் மாவட்டத்தில் அமைந்திருக்கும் படாத்ராவதான் பகுதியை அழகுப்படுத்தும் விதமாக, ரூ. 188 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் பணிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து புரானிகுடம் பகுதியில் அமைந்துள்ள மகா ரித்யுன்ஜே கோயிலில் நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.
பின்னர், மலை பகுதியில் அமைந்திருக்கும் கர்பி அங்லாங் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு அண்மையில் சரணடைந்த தீவிரவாதிகளை அமித்ஷா சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிப்ரவரி 28ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வருகை
கடந்த மாதம் 23, பிப்ரவரி 11 ஆகிய தேதிகளில் அசாம் மாநிலம் சென்ற அமித்ஷா, அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்று பேசினார். வடகிழக்கு மாநிலமான அசாம், மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதை கருத்தில் கொண்டு அடிக்கடி அங்கு விஜயம் செய்து வரும் அமித்ஷா, இருமாநிலங்களில் அதிகமாக வசிக்கும் ராஜ்போங்ஷி இன மக்களின் பிரதான தலைவரான மகாராஜ் ஆனந்த ராய்யுடன் சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நிகழ்த்தினார்.
ராஜ்போங்ஷி இன மக்களில் 18.5 லட்சம் வாக்காளர்கள் இரு மாநிலத்தையும் சேர்த்து இருப்பதால், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ட்ரம்ப்பை விட மோசமான நிலை மோடிக்கு காத்திருக்கிறது - மம்தா