உத்தரப் பிரதேசம்: நாடு முழுவதும் பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் வேளையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி. புஷ்பராஜ் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தில் ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் (DGGI) நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து, தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் கோடிக்கணக்கான பணத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வருமான வரித் துறையினரின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
பல இடங்களில் சோதனை
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இன்றைய தினம் நகரின் மற்றொரு வாசனை திரவிய வர்த்தகருக்குச் சொந்தமான இடத்திலும், கான்பூர், பம்பாய், சூரத் ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில் திண்டுக்கல்லிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
வாசனை திரவிய வணிகத்தில் ஈடுபடும் புஷ்பராஜ் ஜெயின், சமீபத்தில் சமாஜ்வாதி வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், அகிலேஷ் யாதவின் நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார் புஷ்பராஜ் ஜெயின்.
வருமான வரித் துறையின் சோதனை நடவடிக்கை குறித்து தகவல் தெரிந்ததையடுத்து, அகிலேஷ் யாதவ் செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்றுவரும் சோதனை
ஏற்கனவே பியுஷ் ஜெயின் மீதான வருமானவரித் துறையின் சோதனையின்போதும் எதிர்க்கட்சியினர் ட்விட்டரில் இது குறித்து விமர்சனத்தை முன்வைத்தனர். வருமான வரித் துறையினரின் இந்தச் சோதனை, பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் எனவும் அகிலேஷ் யாதவ் காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.
இயக்குநர் ஜெனரல் (DGGI) தலைமையிலான ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு கடந்த வாரம் முதல் கான்பூரில் உள்ள பல தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திவருகிறது.
கான்பூர் வாசனை திரவிய வர்த்தகர் பியூஷ் ஜெயினிடமிருந்து பல கோடி மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல்செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில் தொழிலதிபர் சுனில் குப்தாவுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்திலிருந்து நடைபெற்றுவரும் சோதனை நடவடிக்கைகளில், தொடர்ந்து மூன்றாவது சோதனை இதுவாகும்.
இதையும் படிங்க: முன்னாள் பெண் ஐபிஎஸ் அலுவலர் திலகாவதி மீது புகார்