பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தனது புதிய கட்சிக்கு பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனப் பெயரிட்டுள்ளார்.
சோனியா காந்திக்கு அமரீந்தர் எழுதிய கடிதத்தில், "கட்சிக்கு தேவையில்லாத நிதானமற்ற நபரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆதரவு அளித்தனர்.
காங்கிரஸ் தலைவரான நீங்கள் இதைக் கண்டும் காணாமலும் புறக்கணித்துவிட்டீர்கள். என்னை அவமானப்படுத்தும் விதமாகவே கட்சி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. இறுதியாக என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டீர்கள்.
என்னை உங்களுக்கு 52 ஆண்டுகளாகத் தெரிந்திருந்தாலும், என்னையும் எனது நடத்தைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கவில்லை.
நீங்களும் உங்களது பிள்ளைகளும் என்னிடம் நடந்துகொண்ட விதம் என்னை பெரிதும் காயப்படுத்தியுள்ளது. என் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்புக்கு நிகராகவே உங்கள் மீதும் அன்பு வைத்துள்ளேன். வேறு எந்த காங்கிரஸ் தலைவருக்கும் இதுபோன்ற கடினமாக சூழல் இனி வரக்கூடாது என விரும்புகிறேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் அங்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்