டெல்லி: முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரும்; பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார். அதுமட்டுமின்றி, தனது கட்சியினையும் பாஜகவோடு இணைத்துக்கொண்டார்.
காங்கிரஸின் முகமாகப் பார்க்கப்பட்ட அமரீந்தர் சிங், அக்கட்சியில் நிலவிய உட்கட்சி பூசல்களால், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்ட அவரது கட்சி, பஞ்சாபில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியாமல் தோற்றுப்போனது.
குறிப்பாக, அமரீந்தர் சிங், தனது சொந்தத்தொகுதியான பாட்டியாலா புறநகர் தொகுதியில் தோற்றார். அப்போது, அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியானது, பாஜகவோடும், சிரோமணி அகாலி தளத்துடனும் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமரீந்தர் சிங் இன்று காலையில் பாஜகவின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சித்தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர், இன்று மாலை 6 மணிக்கு, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் சுனில் ஜாகர் மற்றும் பாஜக பஞ்சாப் தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தன் கட்சியையும் பாஜகவோடு இணைத்துக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆயுதம் கூட வாங்கப்படவில்லை என்றும்; ஆயுதத்தில் இந்தியாவை விட சீனா முன்னணியில் இருக்கிறது என்றும்; இதற்குக் காரணம், காங்கிரஸ் தான் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத்துக்கு கட்டப்பட்ட கோயில்: இது உ.பி. சம்பவம்