டெல்லி: பல பகுதிகளில் காற்று மாசு குறியீடு 533 என்ற அபாய அளவில் இருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. புகைமூட்டம் நிலவுவதால் பலர் சுவாசிக்க சிரமப்பட்டதாகவும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளிகொண்டாட்டம் மூலம் ஏற்பட்ட காற்று மாசை குறைப்பதற்காக, 114 டேங்கர்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதன் மூலம் காற்றில் உள்ள நச்சுத்துகள்கள் தரைபரப்பிற்கு வந்தடையும் என்று கருதப்படுகிறது.
விழா காலத்தை முன்னிட்டு பட்டாசுகளுக்கு ஜனவரி 1, 2022ஆம் தேதி வரை டெல்லி அரசு தடைவிதித்தது. அத்துடன், பட்டாசுக்கு எதிரான பரப்புரையையும் மேற்கொண்டது. இருப்பினும் ஆங்காங்கே தீபாவளியின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்த பயிர்க்கழிவு எரிப்பால் ஏற்பட்ட புகை ஆகியவற்றின் காரணமாக டெல்லி காற்றின் தரக் குறியீடு கடுமையான சூழலுக்கு சென்றது.
மக்கள் பட்டாசு தடையை மீறியதற்காக பாஜக மீது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராய் குற்றஞ்சாட்டினார். தடையை மீறி அவர்கள் பட்டாசு வெடித்தனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தீபாவளி இரவில் நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 'கடுமையான' சூழலுக்குச் சென்றது.
டெல்லியைச் சுற்றியுள்ள ஃபரீதாபாத் (464), கிரேட்டா் நொய்டா (441), காஜியாபாத் (461), குருகிராம் (470) மற்றும் நொய்டா (471) ஆகிய பகுதிகளிலும் நேற்று (நவம்பர் 5) பிற்பகல் 3 மணிக்கு 'கடுமையான' பிரிவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.
காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட குறியீடு 'சிறப்பானது', 51இல் இருந்து 100 வரையிலான குறியீடு 'திருப்திகரமானது'. 101 மற்றும் 200 இடைப்பட்ட பகுதி 'மிதமானது'. 301க்கும் 400க்கும் இடையே 'மிகவும் மோசமானது'. 401க்கு மேலே இருந்தால் 'கடுமையானது' என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடர் சாலை விபத்து