டெல்லி: இந்திய கால்பந்து நிா்வாகத்தில் 3ஆம் தரப்பு தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டிய, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (எப்ஐஎப்ஏ) அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாலம் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை போட்டிக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தடைக் காலத்தின்போது இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்ந்த போட்டி நிர்வாகிகள், வீரா், வீராங்கனைகள் யாரும் ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) சாா்ந்த போட்டிகளோ, பயிற்சிகளோ பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி, ஏடிகே மோகன் பஹான் ஆகிய இந்திய கிளப் அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (எப்ஐஎப்ஏ), ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த கடிதத்தில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாகவே ஸ்ரீகோகுலம் கேரளா எப்சி அணி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த ஒரு அணியுடனும், மற்றொரு அணியுடனும் வரும் 23, 26 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளது. இதே போல ஏடிகே மோகன் பஹான் அணி செப்டம்பர் 7ஆம் தேதி பஹ்ரைனில் ஆசிய கால்பந்து சம்மேளன போட்டியில் விளையாடவுள்ளது.
ஆகவே இந்த அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அதோடு உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை விதிக்க காரணம்: இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் நடத்தப்பட வில்லை. இந்த காரணத்தால் கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேல் மே 18ஆம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். டேவ் தலைமையிலான மூன்று பேர் குழுவை அமைத்தும், இந்தாண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தலையீட்டை காரணம்காட்டியே இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா VS ஜிம்பாப்வே தொடர்... 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...