புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விளையாட்டு திடலுக்கு செல்லும் வம்பாகீரப்பாளையம் மெயின் ரோட்டில் சேதமடைந்த சாலைகளை பேட்ஜ் பணி மூலம் சீரமைக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி அறிந்து அங்கு சென்ற தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக சட்டப்பேரவை கட்சி தலைவருமான அன்பழகன் அப்பணியை தடுத்து நிறுத்தினார். மேலும் அதற்காக அங்கு குவிக்கப்பட்டிருந்த சிமெண்ட் கலவைகளை தூக்கி எறிந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமல், இந்த பகுதியில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து அலுவலர்கள் அப்பணியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2 ஆண்டாக எந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கவில்லை. இதனால் தொகுதிகளில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக அரசிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினமும் முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரிடம் மோதல் போக்கையே மேற்கொண்டு வருகின்றார். மக்கள் நலனில் கவனம் செலுத்துவதில்லை. ஆளுநருக்கும் வேறு வேலையில்லாமல் முதலமைச்சருடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றார். இதனால் மக்கள் நலப்பணிகள் முடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 26ஆம் தேதி குடியரசு தின விழாவிற்கு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் செல்லும் சாலையை இன்று பேட்ஜ் பணி மூலம் சீரமைக்க மேற்கொண்டனர். இவ்வளவு நாள் வராதவர்கள், ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் சொகுசு காரில் செல்வதற்காக பேட்ஜ் பணியை இன்று மேற்கொண்டனர். இதனால் தடுத்து நிறுத்தினோம்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ஜ் பணியை தொடங்கி முடித்துவிட்டு இங்கு வரவேண்டும். முதலில் மக்கள்தான் முக்கியம். ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் சுகமாக வாழ்வதற்கு அதிகாரம் இல்லை” என்றார்.
இதையும் படிங்க:குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் உரையாடவுள்ள கிரண்பேடி