புதுச்சேரி முதலியார்பேட்டையில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சம்பத் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாஸ்கரன் எம்எல்ஏ மீது நேற்று புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்திருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் பாஸ்கர் மீது வழக்குப்பதிவுசெய்தனர்.
இந்த நிலையில் பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் இன்று புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் கடலூர் புதுச்சேரி சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணிநேரம் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கருடன் காவல் கண்காணிப்பாளர் ஜிந்தாகோதண்டராமன் தலைமையில் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பாஸ்கர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "என் மீது எதிர்த்தரப்பினர் பொய்ப்புகார் கூறி வழக்குத் தொடுத்துள்ளனர். எதிராகப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேண்டுமென்றே என் மீது வழக்குத் தொடுத்தார்.
இது தொடர்பாக காவல் துறையினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வழக்கை ரத்துசெய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைத் திரும்பப் பெற்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மறக்க முடியாத தருணம்' - பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய மகிழ்வில் செவிலியர்!