லக்னோ : 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்திய போதிலும் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதனிடையே இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாயா யாத்திரையில் களமிறங்கி உள்ளார். அதே நேரம், பாஜகவும் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று (ஜன. 15) அறிவித்தார்.
இது குறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, "பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவுடன், கடந்த 2007ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம், அதனால்தான் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம்.
இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை அடுத்த அரசியல் வாரிசாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சென்னை - அயோத்தி ஸ்பைஸ்ஜெட் விமான சேவை! டிக்கெட் எவ்வளவு தெரியுமா?