ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்தர் சிங். இவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசித்துவருகிறார். இவருக்கு பாகிஸ்தானிலுள்ள அரம்கோட் கிராமத்தில் வசித்துவந்த பெண் ஒருவருடன் 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களது திருமணம் நடைபெற்ற காலகட்டத்தில் புல்வாமா தாக்குதல், அதற்கு எதிரான இந்திய அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் இருநாட்டு எல்லைப் பகுதி மக்களையும் பதற்றத்தில் வைத்திருந்தது.
இந்தக் காரணத்தினால், பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண்ணை இந்தியாவிற்கு அழைத்துவர விசா (நுழைவு இசைவு) மறுக்கப்பட்டது. இந்திய அரசு தனக்கு விரைவில் நுழைவு இசைவு வழங்க ஒப்புதல் தெரிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
ஆனால், மாதங்கள் உருண்டோடியும், மணப்பெண்ணின் இந்திய வருகைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த இருவீட்டாரும் கடந்த இரு ஆண்டுகளாக மணப்பெண் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைத் தங்களால் முயன்ற அளவு செய்துவந்தனர்.
இந்நிலையில், நமது ஈடிவி செய்தி தளத்தில் இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதைக் கண்ட மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சௌத்ரியின் உதவியாளர் இந்த விவகாரத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
பின்னர் அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும், மத்திய வெளியுறவுத் துறை அலுவலர்களையும் சந்தித்து அந்தப் பெண் இந்தியா திரும்ப ஆவனசெய்தார்.
இவரது சீரிய முயற்சியால், நேற்று முன்தினம் அதாவது மகளிர் நாளன்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மணப்பெண் இந்தியா திரும்பினார். இவருக்கு வாகா எல்லையில், குடும்பத்தினர் பெரும் வரவேற்பு அளித்தனர். இந்தச் சம்பவம் அங்கிருப்பவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.