ஐதராபாத் : பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்று இருந்தார். பின்னர், லட்சத்தீவு பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "லட்சத்தீவுகள் வெறும் தீவுகளின் கூட்டமல்ல என்றும் அது காலம் காலமாக நீடித்து வரும் அம்மக்களின் பாரம்பரியம் என்றும், நீங்கள் சுவாரஸ்யமிக்க மற்றும் நல்லதொரு பயண அனுபவத்தைப் பெற விரும்பினால், உங்கள் பயணப் பட்டியலில் லட்சத்தீவும் இடம் பெற வேண்டும்" என பதிவிட்டார்.
பிரதமர் மோடியின் பதிவுக்கு மாலத்தீவு அமைச்சர்கள் பல்வேறு அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அரசின் அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் அவதூறு கருத்து சர்ச்சையாக வெடித்தது. பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் போர்க் கொடி தூக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரை இடைநீக்கம் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், 3 அமைச்சர்களின் கருத்து தனிப்பட்ட கருத்துகள் என்றும் அரசு சார்ந்தது இல்லை என்றும் மாலத்தீவு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், விளக்கம் கேட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாலத்தீவை புறந்தள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் முழக்கங்கள் எழுந்து உள்ளன.
அதன் முதல் கட்டமாக பிரபல போக்குவரத்து ஏஜென்சி நிறுவனமான Ease My Trip, மாலத்தீவு செல்வதற்கான டிக்கெட் புக்கிங்களை அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை தொடர்ந்து அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தை அடுத்து லட்சத்தீவு குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 3 ஆயிரத்து 400 மடங்கு அதிகரித்து உள்ளதாக பிரபல தனியார் ஆன்லைன் போக்குவரத்து நிறுவனமான மேக் மை ட்ரீப் (MakeMyTrip) தெரிவித்து உள்ளது. அதேபோல், பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளிலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லட்சத்தீவு குறித்து தேடும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் பயணத்தை தொடர்ந்து ஒரே இரவில் கவனம் ஈர்த்த லட்சத்தீவை குறி வைத்து, கல்லா கட்ட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் Make My Trip, Ease My Trip போன்ற நிறுவனங்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன.
இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள்: மாலத்தீவு வெளியுறவுத் துறை விளக்கம்..