மகாராஷ்டிரா : மும்பையில் 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். இதில், சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்பட பல பாலிவுட் பிரபலங்களும் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இது தொடர்பான விசாரணையை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தொடங்கியது.
இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஒரு மாதம் கழித்து மும்பை உயர் நீதிமன்றம் ரியாவிற்கு ஜாமீன் வழங்கியது. மேலும் ரியாவின் சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட பலரும் போதைப்பொருள் விற்பனையில் இருந்துவந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்நிலையில், போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருள்கள் (NDPS) நீதிமன்றத்தில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், “சாமுவேல் மிராண்டா, ஷோவிக் மற்றும் தீபேஷ் சாவந்த் உள்ளிட்ட வியாபாரிகளிடமிருந்து ரியா சக்ரவர்த்தி பலமுறை சுஷாந்திற்கு கஞ்சா சப்ளை செய்துள்ளார்.
மேலும் ரியாவின் சகோதரர் ஷோவிக், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இவர், அவர்களிடமிருந்து மரிஜுவானா மற்றும் ஹாஷிஷ் ஆர்டர்களை எடுத்துக்கொண்டு போதைப்பொருள்களை சுஷாந்திடம் ஒப்படைத்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருள்கள் சட்டத்தின் 27 மற்றும் 27ஏ, 28 மற்றும் 29 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தயவு செய்து திரும்பி வா சுஷாந்த்' - உணர்சிவசப்பட்ட ரியா சக்ரவர்த்தி