சண்டிகர் : பொறாமை குணத்தால் உறவினர்கள் ஆசிட் வீச்சு, பியூனின் மகளாகப் பிறந்ததால் சாதாரண வாழ்க்கைக்கே திண்டாட்டம். இருப்பினும், சிபிஎஸ்இ தேர்வில் 95.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார், பஞ்சாப்பைச் சேர்ந்த மாணவி.
சண்டிகரைச் சேர்ந்தவர் 15 வயது மாணவி, கஃபி. கஃபியின் தந்தை தலைமைச்செயலகத்தில் பியூனாகப் பணியாற்றி வருகிறார். கஃபிக்கு மூன்று வயதாக இருக்கும்போது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பொறாமை உணர்வால், ஆசிட் வீச்சுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்.
கஃபியின் முகம் முழுவதும் எரிந்த நிலையில், 6 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். மேலும் ஆசிட் வீச்சால் அவரது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. 6 ஆண்டுகள் சிகிச்சை முடிந்து வெளியே வந்த கஃபி வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார்.
கண் பார்வையற்றவர்கள் படிக்கும் ப்ரெய்லி மொழியை நன்கு கற்றறிந்த கஃபி, அதில் நன்கு புலமைப் பெற்று உள்ளார். அதிவேகமாக ப்ரெய்லி ஸ்கிரிப்டுகளை படிக்க கற்றுக் கொண்ட கஃபி, அதன் விளைவாக 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 95.02 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து சாதனைப் படைத்து உள்ளார்.
ஆசிட் வீச்சால் கண் பார்வை பறிபோனது, தந்தை பியூன் வேலை பார்ப்பதால் வீட்டில் வறுமை நிலை இருப்பினும் வைராக்கியத்தை கைவிடாத கஃபி, இன்று பல லட்சம் சிறுமிகள், மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கமாக அமைந்து உள்ளார். தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவை கொண்டு உள்ளதாகவும், அதன் மூலம் தன் பெற்றோரை பெருமையடையச் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், பெற்றோர் அளித்த உடல் மற்றும் மனதளவிலான ஊக்கமே சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற உதவியதாக கஃபி தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் கொடுத்த வழிகாட்டல்கள் மற்றும் இணையதளம் மற்றும் யூடியூப் ஆகியவை தேர்வுக்குத் தயாராக பெரிதும் உதவியதாக கஃபி தெரிவித்து உள்ளார்.
கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாக்கப்பட்டதால் மன உறுதியை இழந்ததாகவும், நன்கு அறிமுகமான மனிதர் அளித்த ஊக்கத்தால், அவரை படிக்க வைத்ததாகவும், தற்போது கஃபி சாதித்து தங்களை பெருமையடையச் செய்து உள்ளதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். மேலும் கஃபி விரும்பும் துறையில் சேர்ந்து படிக்கவும் அவரது விருப்பத்தை நிறைவேற்றவும் இரவும் பகலும் உழைக்க தயாராக இருப்பதாகவும் அவரது பெற்றோர் கூறினர்.
இதையும் படிங்க : Mallikarjun Kharge : அதிர்ஷ்டக்கார மல்லிகார்ஜூன கார்கே... 8 மாதத்தில் இவ்வளவு பெரிய சாதனையா!