வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராடிவரும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் பஞ்சாப் ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராகவ் சட்டா கூறுகையில், "போராட்டத்திற்கு எதிரான பரப்புரையாளர்களை எதிர்கொள்ளும் வகையிலும் இணைய பிரச்னையை சரி செய்யும் நோக்கிலும் இலவச வைஃபை வசதி வழங்கப்படவுள்ளது.
போராட்டத்தின்போது, இலவச வைஃபை வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் தன்னார்வலராக கட்சி பணியாற்றி வருகிறது. வீட்டில் உள்ள குடும்பத்தாரிடம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு வைஃபை ஹாட்ஸ்பாட் ஏற்படுத்தி தர வேண்டும் என தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ளார்.
வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பால் இருந்து போராடும் விவசாயிகள் தங்களின் குடும்பத்தாரிடம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, அவர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நல்ல வாழ்க்கையை வாழ உணவு, உடை, வீடு ஆகியவை மனிதனுக்கு தேவைப்படுகின்றன. இப்போது, கூடுதலாக இணைய வசதி தேவைப்படுகிறது. வைஃபை வசதிகளை ஏற்படுத்த சில இடங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். சிக்னல் கிடைக்கும் வகையில் 100 கி.மீ., தொலைவில் ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும்" என்றார்.