டெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அதிகாரம் தொடர்பாக டெல்லி அரசுக்கும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு 'தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்' நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
அதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை டெல்லி அரசுக்கு ஏற்பட்டது. ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் இச்சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், டெல்லியில் ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட ஏ பிரிவு அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் கோரியிருந்தார்.
இதனிடையே கடந்த 3ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், அதைப் பற்றி விவாதிக்காமல் மசோதாவை நிறைவேற்றுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும், சட்டப்பிரிவு 239AA-ன் படி டெல்லி அரசிடமிருந்து அதிகாரங்களைத் திரும்பப்பெற நாடாளுமன்றத்திற்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருப்பதால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதா நிறைவேறியது.
இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 7) மாநிலங்களவையில் டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதேபோல், இந்த மசோதாவை எதிர்க்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், அனைத்து உறுப்பினர்களும் இன்றைக்கு அவைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் இந்த கூட்டத்தொடரில், டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சந்தீப் பதக் கடிதம் வழங்கியுள்ளார். அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டம் குறித்து மக்களவையில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், அவசரச் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், அதனால், இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 239AA பிரிவில் திருத்தம் செய்ய முயற்சிப்பதால், இந்த மசோதா அவையின் சட்டமியற்றும் உரிமைக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி இதனை தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!