டெல்லி: 2024ஆம் ஆண்டில் 68 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைகிறது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங், சுஷில் குமார், என் டி குப்தா ஆகியோரின் பதவிக்காலம் வருகின்ற 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக எம்.பி சுஷில் குமார், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஹாரியான மாநிலத் தேர்தலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுஷில் குமாருக்குப் பதிலாக டெல்லி மகளிர் ஆணையத்தின் (DWC) தலைவர் ஸ்வாதி மாலிவால் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகியோர் இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என அரசியல் விவகாரக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பு மனு மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வருகின்ற 9ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனது டெல்லி மகளிர் ஆணைய தலைவர் பதவியை ஸ்வாதி மாலிவால் ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி!