டெல்லி : மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக போராட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்து இருப்பது சாதகமான வளர்ச்சியாக கருதப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது.
குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிடை மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் ஆளும் டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவசர சட்டத்திற்கு எதிராக அனைத்து மாநில எதிர்க் கட்சிகளிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டினார்.
டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தரப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி முதலில் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை. 15) காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக குரள் எழுப்ப உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் டெல்லி அவசர சட்டம் தொடர்பாக மசோதா கொண்டு வரப்படும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான மோடி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சாதகமான வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சந்தேகத்திற்கு இடமளிக்காத எதிர்ப்பு டெல்லி ஆதரவான சூழலை உருவாக்கி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் நாளை (ஜூலை. 17) அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் நிலைப்பாடு அந்த கூட்டத்தில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, அடுத்த பிரதமர் யார் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சரத் பவார் - அஜித் பவார், 8 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு... மராட்டிய அரசியலில் திடீர் சலசலப்பு!