திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் செந்தநாடு பகுதியில் வசித்துவருபவர் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவன். பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இவரை ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து, பள்ளி மாணவன் அவரது பெற்றோரிடத்தில் தெரிவிக்கவே, அவர் பனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, புகாரின் பேரில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, ஆட்டோ ஓட்டுநர் ஜீனேஷ் என்பவர் மாணவனை அடிப்பது தெரியவந்தது. அவர் அடிக்கத் தொடங்கியவுடன் அவருடன் இருந்த சக ஆட்டோ ஓட்டுநர்களும் மாணவனை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஜீனேஷிடம் விசாரித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மாணவன் ஒரு பெண்ணுடன் பழகிவருவதாகவும், அவர் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகக்கூடாது என்பதற்காக இவ்வாறு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.