கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, அங்கு விளையும் அரியவகை கோல்டன் டீத்தூள் கவுகாத்தி தேயிலை ஏல நிலையம் (GTAC) மூலம் 99,999 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது. இந்நிலையத்தின் செயலாளர் தினேக்ஷ் பிகானி கூறுகையில், மனோகரி கோல்டு டீத்தூள் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது. சென்ற ஆண்டு 75,000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது என்றார்.
இந்த அரியவகை தேயிலைத்தூளை சவுரவ் வர்த்தக நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் அதிகபட்ச விலை கிலோவுக்கு 99,999 ரூபாய் என விற்கப்படுகிறது. இது போன்ற அரிய வகை டீத்தூளை பல வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்புவதாக பிகானி தெரிவித்தார். இந்த விற்பனை அஸ்ஸாம் தேயிலை விற்பனையில் ஒரு பெரிய மைல் கல்லாகும்.
இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 52 விழுக்காடு அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தியாகிறது. அஸ்ஸாமின் பல இடங்களில் விளையும் பல்வேறு தேயிலை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் இந்திய தேயிலை ஆணையம் (NTA) தேயிலைத் தோட்டங்களை விரிவுப்படுத்துவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது, மேலும் அங்குப் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு கால வருங்கால வைப்புத்தொகை (PF) வழங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் தாண்டி அஸ்ஸாமில் 850 சிறிய, பெரிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதன் பராமரிப்புப் பணிகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம்செய்ய வேண்டும். இந்திய தேயிலை ஆணையமும் இதையே பரிந்துரைசெய்கிறது.