அகமதாபாத்: குஜராத் மாநிலம் தாஹோத் பகுதியைச் சேர்ந்த லால்பாய் சங்கடா என்பவர், அகமதாபாத்தில் உள்ள மாநகராட்சி கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பாதுகாவலியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு, வஸ்தராபூர் ஏரிக்கரை பகுதியில் லாலாபாய் படுத்து உறங்கி உள்ளார்.
அந்த இடத்திற்கு வந்த இளைஞர், லாலாபாயை எழுப்பி தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். தண்ணீர் தர முடியாது என லாலாபாய் மறுத்ததாக கூறப்படும் நிலையில், இளைஞருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தண்ணீர் தராத ஆத்திரத்தில் இளைஞர், லாலாபாய் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளார்.
இளைஞரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த லாலாபாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக அக்கம்பக்கத்து கட்டடங்களில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பாக நேபாளத்தை சேர்ந்த இளைஞர் ராம்ஜதான் முக்கியா என்பவரை போலீசார் கைது செய்தனர். குடிக்க தண்ணீர் தராத ஆத்திரத்தில் பாதுகாவலர் லாலாபாயை கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக லாலபாய் மீது இளைஞர் கொலை வெறித் தாக்குதல் நடத்திய போது, அந்த வழியாக சென்ற கூட்டத்தினர், சம்பவத்தை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளதாகவும், இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கலப்பு திருமணம் மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க பிஎப்ஐ திட்டம் - ஏடிஎஸ் குற்றப்பத்திரிக்கை!