காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பதன்னக்காடு ஜமாத் கமிட்டி, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க முக்கியமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பதன்னக்காடு ஜமாத் கமிட்டியில் இருப்பவர்கள், போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமாத்தின் இந்த முடிவுக்கு காவல்துறை அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பதன்னக்காடு ஜமாத் கமிட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "ஜமாத்தில் யாரேனும் போதைப்பொருள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.
அவர்கள் தங்களது தவறை முழுவதுமான சரி செய்த பின்னர் மட்டுமே மீண்டும் சேர முடியும். ஜமாத்திலிருந்து அவர்களை நீக்குவதற்கு முன்னதாக, போதைப்பொருள் பயன்பாடு குறித்து, குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கன்ஹன்கட் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பதன்னக்காடு ஜமாத் கமிட்டி எடுத்துள்ள முடிவு மிகவும் சரியானது.
ஜமாத்திலிருந்து வெளியேற்றப்படுவோர் மத ரீதியான நடவடிக்கை, திருமணம் உள்ளிட்டவற்றிற்கு ஜமாத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும். ஜமாத்திலிருந்து நீக்கப்பட்டவர்களிடம் ஜமாத்தில் உள்ள பிறரும் பேச மாட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை பிற ஜமாத்தினரும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கும்" என்றார்.
இதையும் படிங்க:திருடன் எனக் குற்றஞ்சாட்டி பட்டியலினத்தவரை கட்டி வைத்து அடித்த கிராமத்தினர்