ஆலப்புழா: கடந்த கரோனா காலகட்டத்தில் மக்கள் பல சிக்கல்களுக்கு ஆளானாலும், சிலர் அவர்கள் புத்திசாலித்தனத்தால் அந்த சிக்கல்களில் இருந்து விடுபட புதிய யுக்தியைக் கையாண்டனர். அதன் மூலம் யாரும் எதிர்பாரா முடிவையும் பெற்றார்கள். அந்த வரிசையில்தான் கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த அசோக் என்ற ஒரு இன்ஜினியர் அனைவருக்கும் வியக்கும் வகையிலான செயலை செய்துள்ளார்.
லண்டனில் மெக்கானிக்கல் இன்ஜினியராகப்பணி புரிந்து வரும் அசோக், அவரது குடும்பத்தினர் பயணிப்பதற்கு ஏற்றவாறு விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளார். கரோனா ஊரடங்கில் இந்த விமானத்தின் கட்டுமானத்தை முழுவதுமாக முடித்துள்ளார். சென்ற 2019ஆம் ஆண்டு மே மாதம் விமானம் செய்யத்தொடங்கி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 30 மாதத்தில் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளார். அசோக் ஏற்கெனவே பிரிட்டன் சிவில் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து விமானம் ஓட்டுவதற்கான கமர்ஷியல் பைலட் உரிமம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்திற்கான அனைத்து உரிமங்களையும் பெற்ற பின்னர் அவர் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று தனது முதல் விமானப்பயணத்தை மேற்கொண்டார். பின்னர் தனது குடும்பத்துடன் ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். அசோக் வடிவமைத்த இந்த விமானத்திற்கு தனது மகளின் பெயரான 'தியா' மற்றும் பிரிட்டனில் உள்ள விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஐகான்களுடன் 'ஜி' என இணைத்து தனது விமானத்திற்கு 'ஜி தியா' என்று பெயரிட்டுள்ளார். மேலும் அசோக் கேரளாவின் முன்னாள் எம்எல்ஏ பேராசிரியர் ஏ.வி. தாமராக்சன் மற்றும் மருத்துவர் சுமலதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அசோக் கூறுகையில், ‘நான் 2019ஆம் ஆண்டு பிரிட்டன் சிவில் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கமர்ஷியல் பைலட் உரிமம் பெற்றேன். எனது குடும்பத்துடன் பயணம் செய்ய நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் எனக்குத் தேவைப்பட்டது. பிறகு எனக்கு ஏர்கிராப்ட் குறித்து தகவல் கிடைத்தது. பின்னர் அதற்கான கிட் ஒரு தென்னாப்பிரிக்க நிறுவனம் வழங்கியது.
பின்னர் பல யூட்யூப் வீடியோக்கள் மற்றும் இதுகுறித்து பலரிடம் ஆலோசனை பெற்று விமானத்தை வடிவமைத்தேன். பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று அந்த விமானத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தினேன். அவர்களது தொழிற்சாலையையும் பார்வையிட்டேன். நான் மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து தென்னாப்பிரிக்க நிறுவனத்திடமிருந்து ஒரு கிட் ஆர்டர் செய்தேன்.
அதை முடிக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. முதல் விமானத்தின் தயாரிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவுக்கு வந்தது. இதனால் மே மாதம் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற்றேன்’’ எனக் கூறினார்.
250 கி.மீக்கு 20 லிட்டர் பெட்ரோல்: ' இந்த விமானத்தில் நாம் மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும்; 20 லிட்டர் பெட்ரோல் மட்டுமே இதற்குத் தேவைப்படும். காரை விட இந்த விமானத்திற்கான எரிபொருள் திறன் அதிகமானது' என அசோக் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இறந்தவர்களுக்குத்திருமணம் செய்து வைக்கும் விநோதச்சடங்கு - துளுபேசும் மக்களின் நம்பிக்கை!