அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதலாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 39 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று (ஏப்.01) நடைபெற்று வருகிறது. கரோனா வழிமுறைகள் பின்பற்றப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
37,34,537 ஆண் வாக்களர்கள், 36,09,959 பெண் வாக்காளர்கள், 135 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 73,44,631 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 13 மாவட்டங்களில் 10,592 வாக்குச்சாவடிகளில் காலை எழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
பாஜக, காங்கிரஸ்-ஏஐயுடிஎஃப் கூட்டணிகளுக்குக்கிடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று முடிவு செய்யப்படவுள்ளது. அல்காபூர் தொகுதியில் அதிகபட்சமாக 19 வேட்பாளர்களும் உடல்குரி தொகுதியில் குறைந்தபட்சமாக 2 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
39 தொகுதிகளில் 2 தொகுதிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறிப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடும் மூன்று முதல் அதற்கு மேலான வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்தமுள்ள 345 வேட்பாளர்களில், 37 பேர் மீது குற்ற வழக்குகளும் 30 பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.