அஸ்ஸாம் மாநிலத்தின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 76.89 விழுக்காடு மக்கள் முதல் கட்டமாக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், மொத்தம் 39 தொகுதிகளைச் சேர்ந்த 10,592 வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 37,34,537 ஆண் வாக்காளர்கள், 36,09,959 பெண் வாக்காளர்கள், 135 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 73,44,631 பேர் வாக்களிக்க உள்ளனர்.
அம்மாநிலத்தின் 30 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 26 பெண் வேட்பாளர்கள் உள்பட 345 வேட்பாளர்களின் நிலையை இந்த இரண்டாம்கட்டத் தேர்தல் தீர்மானிக்க உள்ளது.
345 வேட்பாளர்களில், 37 (11 விழுக்காடு) வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர், 30 (9%) பேர் தங்களுக்கு எதிராக உள்ள கடும் குற்ற வழக்குகள் குறித்து அறிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 39 தொகுதிகளில், கிரிமினல் வழக்குகள் கொண்ட மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகள், ரெட் அலர்ட் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அல்காபூர் தொகுதியில் அதிகபட்ச வேட்பாளர்களும் (19), உதல்குரி தொகுதியில் குறைந்தபட்ச வேட்பாளர்களும் (2) உள்ளனர். தவிர, மொத்தம் 310 பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மம்தா Vs அதிகாரி: நாளை நந்திகிராமில் வாக்குப்பதிவு