ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதர் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார். சௌரஸ்தாவில் உள்ள ஒரு தனியார் கார் சர்வீஸ் சென்டரில் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். இவர் தனது மனைவி, மகள்(6), மகன்(4) உடன் எருகுல பஸ்தி என்ற பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று(பிப்.20) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மகனையும், மகளையும் தான் பணி புரியும் சர்வீஸ் சென்டருக்கு கங்காதர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. மகளை பார்க்கிங் பகுதியில் அமர வைத்துவிட்டு, மகனை நிறுவனத்திற்குள் அழைத்துச் சென்றார். சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தன்னுடன் பணிபுரியும் மற்றொரு நபருடன் கங்காதர் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு சிறுவனை மறந்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து தனியாக விளையாடிய சிறுவன் தனது சகோதரியைத் தேடியபடி நிறுவனத்திற்கு வெளியே சென்றான். அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் சிறுவனை சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கின. சிறுவன் தப்பித்து ஓடியபோதும் அவை துரத்திச் சென்று கடித்துள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க சிறுவன் போராடிக் கொண்டிருந்தான்.
அழுகுரல் கேட்டு அங்கு வந்த சிறுவனின் சகோதரி உடனடியாக சென்று தனது தந்தையை அழைத்து வந்தார். அங்கு வந்த கங்காதர் நாய்களை துரத்திவிட்டு சிறுவனை மீட்டார். பிறகு படுகாயமடைந்த சிறுவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நான்கு வயது சிறுவனை தெருநாய்கள் கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Garib Rath Express: டெல்லி - சென்னை விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!