காந்திநகர்: குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமத்தில் இன்று (ஜூலை 25) போலி மதுபானம் அருந்திய 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 10 பேரையும் ஊர் மக்கள் இருவேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களது உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து மதுபானம் விற்பனை செய்த கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
கடந்த வாரம், மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் உயிரிழந்தனர். போலி மதுபானங்களை ஒழிக்க மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சியில் ரூ.50 லட்சம் மதுபானங்கள் அழிப்பு!