இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தெற்கு சியாங் மாவட்டத்தின் டூட்டிங்கில் இருந்து, 25 கிலோமீட்டர் தெற்கே உள்ள மிக்கிங் அருகே சென்று கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் அக் 21ஆம் தேதி விபத்துக்குள்ளானது.
சுமார் 10.43 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கியவர்களில் நான்கு பேரின் உடல்கள் அன்று மாலையே மீட்கப்பட்டன. ஒருவரது உடல் நேற்று (அக் 22) மீட்கப்பட்டது. இவ்வாறு இப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவது முதல் முறையல்ல. கடந்த 12 ஆண்டுகளில் 8 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. அதில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் 19, 2010: மேற்கு அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில், ராணுவப் படையிலிருந்து கவுகாத்திக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு லெப்டினன்ட் கர்னல் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 17, 2011: கவுகாத்தியில் இருந்து தவாங்கிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட அதில் பயணித்த 17 பயணிகளும் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 30, 2011: பவன் ஹான்ஸ் ஏஎஸ்350 பி-3 ஹெலிகாப்டர், தவாங் ஹெலிபேடில் இருந்து புறப்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் அதன் கட்டுப்பாட்டு தொடர்பை இழந்தது. சுமார் 13,700 அடி உயரத்தில் சேலா பாஸில் இருந்து ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அருணாச்சலபிரதேச முன்னாள் முதலமைச்சர் டோர்ஜி காண்டு உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 4, 2015: கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் உள்ள குன்சாரில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மூத்த இந்திய நிர்வாக அலுவலர் கமலேஷ் ஜோஷி உள்பட மூவர் உயிரிழந்தனர்.
2017: பாபம் பரே மாவட்டத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 6, 2017: தவாங்கிலிருந்து புறப்பட்ட விமானப்படையின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய MI-17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 5, 2022: தவாங் மாவட்டத்தில் லும்புவின் இந்திய-சீன எல்லையில் உள்ள ஜெமிதாங் பாலம் அருகே இந்திய ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், லெப்டினன்ட் கர்னல் சவுரவ் யாதவ் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து