ஆண்டுதோறும் வகுப்பறைகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐ.சி.டி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 2018, 2019ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சகம் வழங்கிய தேசிய ஐ.சி.டி விருதுகளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 2018ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நபர்களில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கணேஷ், கரூரைச் சேர்ந்த மனோகர் சுப்பிரமணியன், கே.பி. தயானந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 2019ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நபர்களில், சிவகங்கையைச் சேர்ந்த செந்தில் செல்வன், சேலத்தைச் சேர்ந்த தங்கராஜா மகாதேவன், ஆர்.எலவரசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
விருதுக்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தால் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 205 உள்ளீடுகள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் 204 ஆசிரியர்கள் இந்த ஆண்டு பிப்ரவரியில் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்துடன் தங்கள் பணிகள் குறித்து விளக்கக்காட்சிகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.