கவுகாத்தி: அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் உள்ள முக்ரோக் சோதனை சாவடி வழியாக இன்று (நவம்பர் 22) அதிகாலையில் சட்டவிரோதமாகயேற்றப்பட்ட மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சோதனை சாவடி போலீசார் லாரியை நிறுத்த முற்பட்டனர். இருப்பினும், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் போலீசார் லாரியின் டயரை துப்பாக்கியால் சுட்டு நிறுத்த செய்தனர். அதன்பின் ஓட்டுநருடன் லாரியில் இருந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் ஜிரிகெண்டிங் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் மேகாலயாவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மக்கள் ஆயுதங்களுடன் ஜிரிகெண்டிங் காவல் நிலையம் முன்பு குவிந்து 3 பேரையும் விடுவிக்குமாறு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே வனக்காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. இதன்காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ், கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ், கிழக்கு காசி ஹில்ஸ், ரி-போய், கிழக்கு மேற்கு காசி ஹில்ஸ், மேற்கு காசி ஹில்ஸ், தென்மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது முக்ரோக் பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு வனக்காவலர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துப்பாக்கியுடன் போஸ் - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் மகன் படம் வைரல்