டெல்லி : கடந்த 5 ஆண்டுகளில் மலக்குழி மரணங்கள் 339 ஆக பதிவாகி உள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு மக்களவையில் இரண்டு எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கடந்த 5 ஆண்டுகளில் மலக் குழி மரணங்கள் 339 ஆக பதிவானதாக தெரிவித்தார்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54 பேரும், தமிழ்நாட்டில் 51 தொழிலாளர்களும் மலக்குழிகளில் சிக்கி உயிரிழந்ததாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் 46 பேர், அரியானாவில் 44 பேர், டெல்லியில் 35 பேர், குஜராத்தில் 28 பேர் கடந்த 5 ஆண்டுகளில் மலக்குழி மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
ஆண்டு வாரியாக 2018ஆம் ஆண்டு 67 வழக்குகள், 2019-ல் 117, 20220ஆம் ஆண்டு 22 வழக்குகள், 2021ஆம் ஆண்டு 58 பேர், 2022ஆம் ஆண்டு 66 வழக்குகள், 2023-ல் 9 பேர் என இதுவரை மலக்குழி இறப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 2018ஆம் ஆண்டு 9 பேர், 2019ஆம் ஆண்டு 15, 2020ஆம் ஆண்டு 9 வழக்குகள், 2021ஆம் ஆண்டு 5 பேர், 2022ஆம் ஆண்டு 13 பேர், 2023ஆம் ஆண்டு 5 பேர் என மலக்குழிகளில் சிக்கி உயிரிழந்ததாக ராம்தாஸ் அத்வாலே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டம் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : "மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார்" - மத்திய அமைச்சர் அமித் ஷா!