கரோனா இரண்டாவது அலை நாட்டையே உலுக்கி கொண்டுள்ளது. இதனிடையே, மருத்துவ வசதி, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதியில்லாமல் பல மாநிலங்கள் நெடிக்கடியை சந்தித்து வருகின்றன.
இதனால், கரோனா கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்டிரா அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் காரணமாக மும்பையில் பணிபுரியும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மை, வருவாய் இன்றி தவிக்கும் அச்சத்தால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அதேபோல், மேற்கு வங்க தொழிலாளர்கள் ஏராளமானோர் தேர்தலையொட்டி மும்பையிலிருந்து வெளியேறினர். இந்நிலையில், 50 ஆயிரம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் மும்பைக்கு திரும்ப வருகின்றனர்.
இதனால், மகாராஷ்டிரா அரசு கரோனா தடுப்பில் கடும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே மூலம் நாளொன்றுக்கு 32 ஆயிரம் தொழிலாளர்களும், மேற்கு ரயில்வே மூலம் 18 ஆயிரம் தொழிலாளர்களும் மும்பைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பைக்கு வரும் பெரும்பாலானோர் கரோனா பரிசோதனை செய்யாமல் நகருக்குள் நுழைகின்றனர். இதனால், மகாராஷ்டிராவில் கரோனா அதிரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா கட்டுப்பாடுகளால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
எனவே, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.