அகமதுநகர்: மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள கர்ஜத்தில் 15 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனின் உடல் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகமதுநகர் போலீசார் கூறுகையில், கர்ஜத் தாலுகாவில் உள்ள கோபார்டியில் வசித்து வரும் கரும்புத் தோட்ட தொழிலாளி சந்தீப் சுட்ரிக் என்பவரது 5 வயது மகன் நேற்று (மார்ச் 14) மாலை 6 மணியளவில் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த போது, அங்குள்ள 15 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இதுகுறித்து அறிந்த சந்தீப் சுட்ரிக் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில், தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடன் சம்பவயிடத்துக்கு விரைந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். ஜேசிபி எந்திரங்களின் உதவி உடன் பக்கவாட்டில் குழி தோண்டிப்பட்டது. சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் சிறுவன் சிக்கியிருந்த பகுதியை எட்டினோம். இதனிடையே குல்தரன் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேல்நிலை மருத்துவமனை குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.
இதையும் படிங்க: மும்பை தீ விபத்து: ஆயிரம் குடிசைகள் தீயில் கருகி சேதம், குழந்தை பலி
நள்ளிரவு 2.30 மணி அளவில் சிறுவன் மீட்கப்பட்டான். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுவன் உயிருடன் இல்லை. இதையடுத்து அவனது உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்கட்ட தகவலில், சந்தீப் சுட்ரிக், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், கோபார்டியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கூலி வேலை செய்ய குடும்பத்துடன் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தனர். இந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தியை அறிந்த கோபார்டி, கர்ஜட் மற்றும் பஞ்ச் கிரிஷி கிராம மக்கள் நள்ளிரவிலேயே சம்பவயிடத்தில் குவிந்து, சிறுவன் உயிருடன் மீட்கப்படுவதை காண எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இருப்பினும் சிறுவன் உயிருடன் மீட்கப்படவில்லை என்பதால், அவனது உடலை அடக்கம் செய்யும் வரை அங்கேயே இருந்து விட்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகள் பெரும்பாலும் உயிரிழந்துவிடுவது சோகத்தை ஏற்படுத்துகிறது. திறந்த வெளி மற்றும் வயல்களில் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பாராமரிப்பின்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: போபால் விஷவாயு கசிவு விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி