ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள இட்கோரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதற்கு அந்த தம்பதியின் உடலில் சில பிரச்னைகளும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஹஜாரிபக் மாவட்டத்தில் உள்ள ஆரோக்யம் என்ற மருத்துவமனையில், மருத்துவர்களின் அறிவுரைப்படி இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்த சிகிச்சையின் பலனாக, அப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து திடீரென பிரசவ வலி ஏற்படவே, அந்தப் பெண் ஜார்கண்ட்டின் மிகப் பெரிய மருத்துவமனையான ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் (RIMS) அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அப்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனை மருத்துவர் சாஷி பாலா சிங் தலைமையிலான மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதனையடுத்து, அப்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதிலும், சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும், பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பெண் குழந்தைகளைப் பார்த்துச் செல்கின்றனர். இதனிடையே, பிறந்த குழந்தைகளின் எடையானது குறைவாக இருந்ததால், அக்குழந்தைகள் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனை மருத்துவர் சாஷி பாலா சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், கருவுற்ற தாயின் உடல் நிலை நலமாக உள்ளதாகவும், பிறந்த 5 பெண் குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அதேபோல், இந்த ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் முதல் முறையாக ஒரு பெண் 5 குழந்தைகளை ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், ஜார்கண்ட் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல் முறை என தெரிய வந்துள்ளது.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு உலகமே கரோனா பெருந்தொற்றில் சிக்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், தெற்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இந்த பிரசவத்தில் தாயும், 9 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருந்ததுதான் ஆச்சரியமாக கவனிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையாகவும் மாற்றப்பட்டது. ஏனென்றால், அதற்கு முன்பு கடந்த 2009ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.
அது மட்டுமல்லாமல், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தடசா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 2 இரட்டையர்கள் என 4 குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கிறது - ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல்