தெலங்கானா: சங்கரரெட்டி மாவட்டம், முத்தங்கியில் உள்ள மகாத்மா ஜோதி பூலே உண்டி உறைவிடப் பள்ளியில் 42 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 491 மாணவர்களும், 27 ஆசிரியர்கள், ஊழியர்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (நவ.28) 261 மாணவர்கள், 27 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனையில் 43 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள மாணவர்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர் காயத்ரி தேவி தலைமையில் இன்று (நவ.29) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கம்மம் மாவட்டத்தில் உள்ள வைராவில் உள்ள உண்டி உறைவிடப் பள்ளியிலும் 27 மாணவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பள்ளியில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், பின்னர் கரோனா தொற்று செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பள்ளியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் கரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த செப்.1ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோட் போடுவது ரீப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு: ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார்