ஜெய்ப்பூர்: உருமாறிய கரோனா தொற்று வகையான ஒமைக்ரான், கடந்த நவம்பர் 24ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் பல நாடுகளில் தொற்று பரவியதை அடுத்து, சர்வேதச அளவில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
இருப்பினும், ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. டிசம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 63 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
4 பேர் பாதிப்பு
அதேபோல், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. கர்நாடகாவில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயதானவருக்கும், 46 வயதான மருத்துவர் ஒருவருக்கும் டிசம்பர் 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதுவே, இந்தியாவில் பதிவான முதல் ஒமைக்ரான் தொற்று.
நேற்றைய (டிசம்பர் 12) நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 38 ஆக இருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்த நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதியாகி உள்ளது.
ஜெய்ப்பூரில் 14 பேருக்கு ஒமைக்ரான்
முன்னதாக, இவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் ராஜஸ்தான் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் (RUHS) அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: Omicron in India: இங்கிலாந்து ரிட்டர்ன் கேரளாவை சேர்ந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி