துபாய் : அல் ராஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. துபாயின் பழமையான அண்டை நகரகமான அல் ரசாவில் உள்ள 4 மாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை நண்பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. 4வது மாடியில் பற்றி மெல்ல குடியிருப்பு முழுவதும் பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக துபாய் உள்நாட்டு பாதுகாப்பு தலைமை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹம்ரியா தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கட்டடத்தில் பரவிய தீயை அணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4 இந்தியர்களில் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்ற இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கட்டடத்தில் பணியாற்றிய 3 பாகிஸ்தானியர்கள், நைஜீரிய பெண்மணி ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களுக்குத் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து துபாய் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள், மற்றும் நண்பர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : தொலைநோக்கு சிந்தனை, அர்ப்பணிப்பில் பிரதமர் மோடிக்கு ஈடு இணையில்லை - அமெரிக்க அமைச்சர்