டின்சுகியா: அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல் மாநிலங்களுக்கு இடையே உள்ள டின்சுகியா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தரப்பில், அஸ்ஸாம்-அருணாச்சல எல்லையில் உள்ள ஃபின்விரு-ரிங்ராங்கான் சாலையில் அதிகாலை துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து 3 பேரின் உடல்களை மீட்டோம். இந்த பணியின்போது எல்லை பாதுகாப்பு படையினரும் உடனிருந்தனர்.
இந்த பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம். அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த அமைப்பை சேர்ந்த உதய் அசோம் என்பவர் கடந்த வாரம் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் நோக்குடன் லெடுவில் அவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டிக் கொடுத்தற்காக இவர்களை கொலை செய்திருக்கலாம். சந்தேக்கூடிய இடங்களில் தனிப்படை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் உள்ள முக்ரோக் சோதனை சாவடியில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி மரம் கடத்தல் தொடர்பாக லாரி ஓட்டுநர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதனால் எல்லையில் உள்ள இரு மாநில குழுக்கள் மோதிக்கொண்டதில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வனக்காவலர் ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் எல்லை விவகாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக இரு மாநிலங்களிலும் உள்ள எல்லை மாவட்டங்களில் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகள்.. நாடகம் அம்பலமானது எப்படி?