சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில் இன்று (பிப்.25) காலை மாவட்ட ரிசர்வ் படை (DRG) காவலர்கள், ஜகர்குண்டா மற்றும் குண்டெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி காவல் ஆய்வாளர் ராமுராம் நாக், காவலர்கள் குஞ்சும் ஜோகா, சாய்னிக் வஞ்சம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஐஜி சுந்தர் ராஜ் கூறுகையில், "நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சென்றுள்ளனர். அப்போது தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், நக்சல்கள் வசமும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
நக்சல் நடத்தியுள்ள கொடூர தாக்குதலுக்கு, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்களின் உயிர் தியாகம் ஒருபோதும் வீணாகாது" என குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 5ம் தேதி பாஜக நிர்வாகி நீல்காந்த் கக்கேம் கொல்லப்பட்டார். கடந்த 10ம் தேதி நாராயண்புர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் சாகர் சாகு நக்சல்களால் கொலை செய்யப்பட்டார். 11ம் தேதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்தார் அலாமி கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: கடினமான நேரத்தில் என்னை அணுகியவர்" - 'கேப்டன் கூல்' தோனி குறித்து கோலி உருக்கம்