பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை மீது சிலர் மை ஊற்றி சிலையை அவமதிக்கும் வகையிலான காணொலி ஒன்று இணையத்தில் வைரலானது.
இந்த காணொலி, கடந்த வியாழக்கிழமை (டிச. 16) பெங்களூருவின் சதாசிவாநகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து, சதாசிவாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அடுத்தடுத்து தாக்குதல்
இதன் தொடர்ச்சியாக, விடுதலை போராட்ட வீரர் சங்கொலி ராயண்ணா சிலை மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். சத்ரபதி சிவாஜி சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வன்முறையாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறையாளர்கள், மாவட்டம் முழுவதும் 26 அரசு பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பெல்காவி காவல்துறை ஆணையர் கே. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
144 தடை
இதன்பின்னர், ராயண்ணா சிலை மீது தாக்குதல் நடத்தியதற்காக கன்னட அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உடைமைகள் அடித்து நொறுக்கப்பட, பெல்காவியில் கன்னடர் - மராட்டியர் என இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, துணை காவல் ஆணையர் விக்ரம் அமதே கூறுகையில், "டிசம்பர் 18ஆம் தேதி காலை மணி 8 மணி முதல் டிசம்பர் 19ஆம் தேதி காலை 6 மணிவரை பெல்காவியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதுவரை பல்வேறு அமைப்பினரின் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், நிலைமை கட்டுக்குள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் யாரும் பதிவிட்டால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். பின்னர், 144 தடை உத்தரவு நாளை (டிச. 20) காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
100 பேர் மீது வழக்குப்பதிவு
ராயண்ணா சிலை தாக்குதல் பின்னான வன்முறையில் இதுவரை 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில், கன்னட அமைப்பான ஸ்ரீ ராமசேனா ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவர், மராட்டியர் சார்பான மகாரஷ்டிரா ஏகிகரண சமிதி (எம்இஎஸ்) கட்சித் தலைவர் ஆகியோரும் கைதாகியுள்ளனர்.
இதுதொடர்பாக, மாவட்டத்தின் மூன்று காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளன. கன்னட மற்றும் மராத்தி சமூகத்தினரின் வன்முறை முயற்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா ஏகிகரண சமிதி (எம்இஎஸ்) கட்சித் தலைவர்களின் அரசியல் தலையீடும் இந்தப் பிரச்னைக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எம்இஎஸ், கர்நாடகாவின் பெல்காவியை தலைமையிடமாக கொண்ட மகாராஷ்டிரா மொழிசார் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குரங்குகளின் தொல்லையால் பாதிப்படையும் கிராம மக்கள்