ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று வரை(ஏப்.25) அங்கு 3 ஆயிரத்து 832 பேர் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், விஜயநகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் இருவருக்கு உயர் அழுத்த ஆக்ஸிஜன் செலுத்தும்போது, ஆக்ஸிஜன் கருவியில் கோளாறு ஏற்பட்டது.
இதில் மூச்சுத் திணறல் தீவிரமாக அவ்விருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, மாவட்ட மருந்து மற்றும் சுகாதார அலுவலர் ரமணகுமாரி கூறுகையில்,'விஜயநகர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 97 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 12 பேருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் உயர் அழுத்த ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.
இதனிடையே, அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அதற்கான தனிப்பட்ட கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதை சரி செய்வதற்கு முன்னர் 2 நோயாளிகள் உயிரிழந்தனர்'என்றார்.
தகவலறிந்த அம்மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர் எம்.ஹரி ஜவஹர்லால் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், உயிரிழப்பிற்கு காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அல்ல எனவும், நோயாளிகளின் உடல் நிலை மோசமாக இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.